
கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்திருப்பதாகவும், இது தலைநகரமா? அல்லது கொலை நகரமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''எதிர்கட்சியாக இருந்தபொழுது கருத்து சுதந்திரம் என வாய்கிழிய பேசினார்கள். இப்பொழுது ஊடகங்களுக்குக் கருத்து சுதந்திரம் இருக்கிறதா? நான் ஊடகங்களில் தினந்தோறும் இந்த ஆட்சியின் அவலங்களையும், எங்கள் கட்சியின் நிலைப்பாடுகளையும் தெரிவித்து வருவதால் என்மேல் அடுக்கடுக்காக வழக்குகள் போடப்பட்டுள்ளது. நான்கு வழக்குகளில் 28 செக்சன்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்னைக்கும் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் வந்திருக்கேன். பத்திரிகை துறையையும், எதிர்க்கட்சியையும் ஒடுக்க காவல்துறை ஏவல் துறையாக மாற்றப்பட்டு செயல்படுவது கண்டனத்திற்குரியது. எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 20 நாட்களில் 18 கொலைகள் நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். இது தலைநகரா? கொலை நகரா?, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் ஃபெயிலியர், சட்ட ஒழுங்கு பராமரிப்பதில் ஃபெயிலியர். இது இரண்டைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்படுவது, ரவுடிகள் ராஜ்யம், ஆளுங்கட்சி அராஜகம் என எல்லாவற்றிலும் அத்துமீறல் நடைபெற்று வருகிறது.