Skip to main content

'அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எங்களுக்கில்லை': அதிருப்தியில் அதிமுக - தேமுதிக கூட்டணி?

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

 AIADMK-dmdk alliance in dissatisfaction

 

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.

 

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுடனும், விஜயகாந்தின் தேமுதிகவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிக, அதிமுகவிற்கு இரண்டு ஆப்ஷன்களைக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆப்ஷன் 1: பாமாவிற்கு ஒதுக்கப்பட்டது போல் 23 தொகுதிகள் வேண்டும். ஆப்ஷன் 2: இருபது தொகுதிகளுடன் ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் எனக் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிமுக சார்பில் 12 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக, தற்போது வரை பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

 

 AIADMK-dmdk alliance in dissatisfaction

 

முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று அமைச்சர்கள் நேரில் சந்தித்த நேரத்தில், பிரேமலதா விஜயகாந்த் விழுப்புரத்தில் கட்சி நிகழ்ச்சியில் இருந்ததால், அவருக்குத் தொலைபேசியில் 12 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் நேரில் வந்து பேசிக்கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்தே தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நடந்த பேச்சுவார்த்தை குறித்து பிரேமலதாவிற்கு தேமுதிக நிர்வாகிகள் தொலைபேசியில் தகவல் தெரிவித்திருந்த நிலையில், ‘பாமகவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு கொடுக்கவில்லை. தமிழ்நாடு முழுக்க நமக்கு கிளைக் கழகம், பூத் கமிட்டி உள்ளது’ என பிரேமலதா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், ‘விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலையில், உங்களுக்கு வாக்குவங்கி அதிகம் கிடைக்காது. எனவே 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது’ என அதிமுக தரப்பு கூறியதாகவும், இதனால் அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (01.03.2021) காலை அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தையை தேமுதிகவினர் தவிர்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

தற்பொழுது சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணிக்கு அழைக்காவிடில் தனியாத் தேர்தலைச் சந்திக்கும் பலமும், போட்டியிடுவதற்கான வேட்பாளர்களும் தேமுதிகவில் உள்ளனர் என முன்னரே பல செய்தியாளர் சந்திப்புகளில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.