அதிமுகவின் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கடந்த 14ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்தான விவாதம் ஏற்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியேவந்து செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை அரசியல் பரபரப்பை ஏற்படுத்திவந்தது. இதன் காரணமாக, ஓ.பி.எஸ். தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில், பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள தீர்மானங்களை தவிர்த்து வேறு தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஓ.பி.எஸ்ஸின் பெயரைச் சொல்லாமல் அனைத்து தலைவர்களும் புறக்கணித்தனர். இதில் அப்சட்டாக மேடையில் அமர்ந்திருந்த ஓ.பி.எஸ். பொதுக்குழு விவரங்களை கவனித்துவந்தார். இறுதியாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “2190 பொதுக்குழு உறுப்பினர்களால் கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய பொருளை விவாதத்திற்கு வைத்திருக்கிறோம். அதிமுக தற்போது இருக்கும் நிலை குறித்தும், குறிப்பாக இரட்டைத் தலைமையால் அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவையும், நிர்வாக சிக்கல்கள் பற்றியும், ஆளும் திமுக அரசையும், கட்சியையும், பிரதான எதிர்க்கட்சி எனும் முறையில் கடுமையாக எதிர்த்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒற்றைத் தலைமை வேண்டும். இந்தப் பொதுக்குழுவில் இரட்டைத் தலைமையை ரத்து செய்ய வேண்டும். இது சம்பந்தமாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும்” என்று அறிவித்தார். இதனையடுத்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், “சட்டத்திற்கு புறமான பொதுக்குழு. இந்த அறிவிப்பு செல்லாது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையெழுத்து போட்டால் தான் அறிவிப்பு செல்லும். இது அறிவிப்பு அல்ல; இந்தக் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். சதிகாரர்கள்” என்று ஆவேசமாக தெரிவித்து விட்டு சென்றார்.