நடிகர் கார்த்தியின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான கருத்தை வரவேற்கின்றோம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA 2020) அறிவிக்கை மக்களின் ஜனநாயக உரிமை பறிப்பதாகவும், நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும் அனைத்து தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி அவர்களும் புதிய அறிவிக்கை பற்றி தனது கருத்துகளை வெளியிட்டிருப்பதை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்கிறது.
நடிகர்கள் தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்தாலே அவர்கள் மீது அரசியல் சாயம் பூசி ஏளனம் செய்வது தமிழகத்திற்கு புதிதல்ல. தமிழக நடிகர் தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்க முன் வந்தால் அவரது ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பும் அரவணைத்து ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் தேவையில்லாத அரசியல் சாயத்தை பூசுவதால் தமிழக மக்களுக்காக நடிகர்கள் குரல் கொடுக்கவே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
மத்திய அரசு எதை செய்தாலும் அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை நடிகர்கள் எடுக்க வேண்டுமென்ற நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. சுற்றுச்சூழல் பொறுத்தவரை எந்தநாட்டிலே ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்தாலும் இன்னும் ஒருபடி மேலே போய் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்பதுதான் நோக்கமாக இருக்கும். இங்கு மட்டும் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலி கொடுக்கின்ற வகையிலே சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையில் அச்சுறுத்தலாக இருக்கும் சரத்துகளில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென்று நடிகர் கார்த்தி அவர்கள் கூறியிருக்கிறார். இந்த அறிவிக்கை பற்றிய விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறார். தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி இந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இந்த போராட்டத்திற்கு எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஆதரவு கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்க வேண்டும்.
கரோனா பாதிப்பு காலத்தில் அரசாங்கம் நடிகர்களை விழிப்புணர்வுக்கு பயன்படுத்தியது நடிகர்கள் கூறும் கருத்துகள் மக்கள் மத்தியில் சென்று சேரும் என்ற காரணத்திற்காக மட்டும் தான். அதேபோல நடிகர் கார்த்தியின் கருத்துகள் விவாத பொருளாக மாறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
இதுபோன்ற மக்களுக்கு நன்மையளிக்கும் விஷயங்களில் நடிகர்கள் மட்டுமல்ல மற்ற எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம். பிறர் மனங்களை புண்படுத்தும்படி சிலர் பேசுகின்ற பேச்சுக்களை கருத்துரிமை என்று கூறுபவர்கள் ஜனநாயக முறையில் தனது கருத்துகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மத்திய அரசிற்கு தெரியபடுத்தும் வகையில் செயல்பட்ட நடிகர் கார்த்தி அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
யார் சொல்கிறார்கள் என்பதை பற்றி விமர்சனம் செய்யாமல் இந்த திருத்தங்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்பதை புரிந்துகொண்டு மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வருவதற்கு முன்வர வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார்.