‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சாரப் பயணத்துக்காக குமரி மாவட்டத்தில் 3 நாட்களாக பலதரபட்ட மக்களைச் சந்தித்து வந்த கனிமொழி எம்.பி., நேற்று (20 ஜன.) மீனவர்கள், ரப்பர் தொழிலாளர்கள், முந்திரி ஆலை தொழிலாளர்கள், 100 நாள் பணியாளர்கள் மற்றும் குடும்ப பெண்கள் ஆகியோர் பங்கெடுத்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்னர் மாலையில் பேச்சிப்பாறை அருகேயுள்ள தச்சமலையில், பழங்குடியின மக்கள் பங்கெடுத்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் கனிமொழி. இதற்காக பேச்சிப்பாறை அணையில் படகு மூலம் 3 கி.மீ. தூரம் பயணம் செய்து தச்சமலைக்குச் சென்றார். அவருக்குப் பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி கும்ப மரியாதை வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அங்கு நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய சௌந்தர், “நான் பொருளாதரம் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். என்னைப் போல் இன்னும் பலர் பட்டப்படிப்பு எல்லாம் படித்து இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு சதவிதம் இடஒதுக்கீடு மட்டும் இருப்பதால், அரசு வேலை எங்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. குறிப்பாக இங்கு அரசு ஆரம்பப் பள்ளியும் அங்கன்வாடி மையமும் இருக்கிறது. அதில் பணிபுரிபவர்கள் 30 அல்லது 40 கி.மீ. தூரத்தில் டவுனில் வசிப்பவர்கள்தான் பேச்சிப்பாறை அணையைக் கடந்து வந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் பணியை, படித்த எங்களுக்கு வரும் தி.மு.க. ஆட்சியில் வழங்க நவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ராஜன் என்பவர், “வனத்தைப் பாதுகாக்க எங்களைத் தவிர வேறு யாருக்கும் உணர்வுபூர்வமான எண்ணங்கள் இருக்காது. அவர்கள் அதை அரசு வேலையாகத்தான் நினைப்பார்கள். ஆனால், நாங்களோ வனத்தை எங்கள் வீடாக நினைத்து வாழ்கிறோம். இதனால் அரசு, வனத்துறையில் எங்களுக்கு வேலை வழங்க தி.மு.க. நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த 2009-ல் தான் எங்களுக்கு மின்சாரமே கிடைத்தது. மின்சாரம் கிடைத்த நாளை பொங்கலிட்டு நாங்கள் கொண்டாடினோம். இங்கிருக்கும் பள்ளிக்கூடமும் அங்கன்வாடி மையமும் தி.மு.க. ஆட்சியில்தான் வந்தது. அதுபோல் அரசியல் கட்சியில் எங்களை நேரிடையாக சந்திக்கும் முதல் தலைவரும் நீங்கள்தான் என பாராட்டினார்கள்.
தொடா்ந்து பேசிய கனிமொழி, “தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல்வர் ஸ்டாலின் உங்கள் குறைகளை நிறைவேற்றித் தருவார். அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன்” என்றார். அதன்பிறகு காட்டில் விளைந்த 11 கிழங்கு வகைகளைச் சமைத்து கனிமொழிக்கு பரிமாறினார்கள். அதை அவர் ருசியோடு விரும்பி உண்டார்.