
கேரள மாநிலம், குரும்பாச்சி மலையில் மலையேற்றத்திற்காக சென்ற 23 வயது இளைஞர் தவறி விழுந்து, மலை இடுக்கில் உள்ள சிறிய குகையில் சிக்கித் தவித்து வருகிறார். ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மேற்கொண்ட இளைஞரை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளார்.
கேரள மாநிலம், மலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பாபு மலையேறுவதில் ஆர்வம் கொண்டவராகக் கூறப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை அன்று பாபுவும், அவரது மூன்று நண்பர்களும் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளனர். மலையேற்றத்தின் போது நடுவழியில் கால் இடறியதில் பாபு உருண்டு விழுந்து, மலை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கிக் கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மலையின் மேல் பகுதிக்கு சென்று கயிறு மூலம் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் விழுந்த பகுதி சரியாக தென் படாததால் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அப்போது தான், அவர்களுக்கு தெரிய வந்தது, தன் நண்பர் குகையில் சிக்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாபுவின் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அங்கு வந்த தீயணைப்புப் படையினர், இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், முயற்சி வெற்றியடையவில்லை. இடுக்கு பகுதி என்பதால் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக, உணவு, குடி தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் பாபுவைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் சூழலில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து, பெங்களூருவில் இருந்து ஒரு பிரிவினரும், தமிழகத்தின் வெலிங்டனில் இருந்த ஒரு பிரிவினரும் குறும்பாச்சி மலைக்கு விரைந்துள்ளனர்.