
மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முகுல் ராய். மத்திய ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியுள்ள இவர், கடந்த 2017ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பிறகு அவர் பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், இன்று (11.06.2021) அவர் தனது மகனோடு பாஜகவில் இருந்து விலகி மம்தா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா, முகுல் ராய் கட்சியில் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவித்தார்.
அப்போது அவரிடம்,மேற்கு வங்க தேர்தலின் போது திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பலரும் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மம்தா, "கட்சியை விமர்சித்தவர்கள், பாஜகவிற்காகவும் பணத்திற்காகவும் கட்சிக்கு துரோகமிழைத்தவர்களை நாங்கள் கருத்தில் கொள்ளமாட்டோம்" என கூறியுள்ளார்.