முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையே இந்த விபத்து குறித்து முப்படை விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி, விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இன்று (18.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரஃபேல் ஒப்பந்தம், அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றைப் பற்றியும் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளதாவது, "விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட எதையும் முன் கூட்டியே வெளியிட நான் விரும்பவில்லை. ஏனெனில் இந்த விசராணை ஒரு முழுமையான செயல்முறையாகும். எங்கே தவறு நடந்திருக்கும் என்று ஒவ்வொரு கோணத்தையும், ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, தகுந்த பரிந்துரைகளைச் செய்வதும், கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதும் முக்கியம். இந்த முழு விசாரணையும் மிகவும் நியாயமான செயல்முறையாக இருக்கும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விவிஐபி-க்கள் பறப்பதற்கான நெறிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு திருத்தப்படும். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், நடைமுறைகள் ஆய்வு செய்யப்படும்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்துவருகிறோம். அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் நன்கு அறிவோம். சீனாவுடனான எல்லை பிரச்சனை தொடர்ந்துகொண்டிருக்கிறது. லடாக்கில் சில பகுதிகளில் படைவிலகல் நடைபெற்றுள்ளது. ஆனால் முழுமையான படை விலகல் நடைபெறவில்லை. விமானப்படை தொடர்ந்து அங்கு நிலைநிறுத்தப்படும். அந்தப் பகுதியில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.
ரஃபேலைப் பொறுத்தவரையில், சரியான நேரத்தில் டெலிவரி செய்ததற்காக அவர்களுக்கு (பிரான்ஸ்) நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதும், அவற்றில் 32 வழங்கப்பட்டுள்ளதும் உங்களுக்குத் தெரியும். மீதமுள்ள நான்கில் மூன்று விமானங்கள் பிப்ரவரியில் டெலிவரி செய்யப்படும். இந்தியா கேட்ட மேம்பாடுகளைக் கொண்ட கடைசி ரஃபேல் விமானம், அதற்கான சோதனைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பிறகு வழங்கப்படும். ரஃபேல் போர் விமானத்தின் எதிர்கால பராமரிப்பு பிரச்சனைகள் மற்றும் இந்தியாவில் டி-லெவல் பராமரிப்பு அமைப்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நாங்கள் விவாதித்துள்ளோம்.” இவ்வாறு வி.ஆர். சவுத்திரி தெரிவித்துள்ளார்.