மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவருடைய சகோதரனை சந்திப்பதற்காக ஜிதேந்திர திவாரி( 53) என்பவர் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது, ஜிதேந்திர திவாரிக்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த சிறுமியை ஜிதேந்திர திவாரி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த ஜிதேந்திர திவாரியின் மனைவி, தன்னுடைய கணவருக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைப்பதாக கூறி அந்த சிறுமிக்கு உறுதியளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர், தங்களுடன் தங்கி நேரம் செலவிட வேண்டும் என்று, அந்த சிறுமியை வற்புறுத்தியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கடந்த 2014ஆம் ஆண்டு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், ஜிதேந்திர திவாரி மற்றும் அவருடைய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கும், மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதி செய்த நீதிமன்றம், ஜிதேந்திர திவாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.