தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கரோனா, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 13 சர்வதேச நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த ஒமிக்ரான் கரோனாவை தங்கள் நாடுகளில் பரவாமல் தடுக்கும் பொருட்டு, பல்வேறு நாடுகளின் அரசுகள் தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு வெளிநாட்டினர் வர தடை விதித்துள்ளர். இந்தநிலையில், சமீபத்தில் ஒமிக்ரான் பரவியுள்ள நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை நிறுத்துமாறு பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய அவர், அந்தக் கடிதத்திலும், ஒமிக்ரான் பரவியுள்ள நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில் இன்று (30.11.2021) அரவிந்த் கெஜ்ரிவால், விமானங்களை நிறுத்துவதில் நாம் ஏன் தாமதம் செய்கிறோம் என பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்களைப் பல நாடுகள் நிறுத்திவிட்டன. நாம் ஏன் தாமதிக்கிறோம்? முதல் அலையின்போதும் கூட, வெளிநாட்டு விமானங்களை நிறுத்துவதில் தாமதம் செய்தோம். பெரும்பாலான வெளிநாட்டு விமானங்கள் டெல்லி வந்தன. டெல்லி மிகவும் பாதிக்கப்பட்டது. பிரதமரே தயவுசெய்து விமானங்களை உடனடியாக நிறுத்துங்கள்" என கூறியுள்ளார்.