லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த முறை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ தவிர வேறு எந்த அமைப்பு இந்த வழக்கை விசாரிக்கலாம் எனக் கூறுமாறு உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உத்தரப்பிரதேச வழக்கறிஞர், வன்முறை தொடர்பான தற்போதைய நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் நீதிபதிகளோ, கடைசி நிமிடத்தில் அறிக்கையை தாக்கல் செய்தால் எப்படி படிப்பது என கேள்வியெழுப்பியதுடன், குறைந்தபட்சம் ஒருநாள் முன்னதாக அறிக்கையை சமர்பித்திருக்க வேண்டும் எனக் கூறினர்.
இதனைத்தொடர்ந்து, 44 சாட்சியங்களில் 4 பேரின் வாக்குமூலத்தை மட்டுமே பதிவு செய்திருப்பது ஏன் என கேள்வியெழுப்பினர். அதற்கு உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர், வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடைமுறை நடைபெற்று வருவதாகவும், முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உடனே நீதிபதிகள், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த உ.பி அரசு வழக்கறிஞர், விவசாயிகள் மீது கார் ஏறியது மற்றும் காரில் இருந்தவர்கள் கொல்லப்பட்டது என இரண்டு குற்றங்களில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக விவசாயிகள் மீது கார் ஏற்றிய குற்றத்திற்காக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள், சாட்சிகளை விசாரிக்காமல் இந்த வழக்கில் முன்னோக்கி செல்ல முடியாது என கூறி, சாட்சிகளை பாதுகாத்து, அதிகம் பேரை விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த விசாரணையின்போது, 'நீங்கள் இந்த விஷயத்திலிருந்து காலை இழுத்துக்கொள்வதாக நாங்கள் நினைக்கிறோம். அந்த எண்ணத்தை போக்குங்கள்" உத்தரப்பிரதேச போலீசாரை குறிப்பிட்டு என கூறியதும் குறிப்பிடத்தக்கது.