Skip to main content

"புதிய தேசிய சுகாதாரக் கொள்கையில் பணியாற்றிவருகிறோம்" - பிரதமர் மோடி!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

narendra modi

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (30.09.2021) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'சிபெட்: பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை காணொளி வாயிலாக திறந்துவைத்தார். மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பேசிய நரேந்திர மோடி, புதிய தேசிய சுகாதாரக் கொள்கையில் இந்தியா பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி பேசியது வருமாறு:

 

இந்த (கரோனா) தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள சுகாதாரத்துறைக்கு நிறைய கற்றுதந்தது. ஒவ்வொரு நாடும் இந்த நெருக்கடியை தங்களது வழியில் கையாளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நேரத்தில் இந்தியா தனது வலிமையையும், சுயசார்பையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. நாட்டின் சுகாதாரத்துறையை மாற்றுவதற்கு ஒரு புதிய தேசிய சுகாதாரக் கொள்கையில் நாம் பணியாற்றிவருகிறோம். ஸ்வச் பாரத் அபியான், ஆயுஷ்மான் பாரத் மற்றும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் போன்றவை இதன் ஒரு பகுதியாகும்.

 

சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சுகாதார சேவைகளை விரிவுபடுத்த உதவி செய்யும். நல்ல மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்கள் போன்றவற்றை ஒரு கிளிக்கில் அணுகலாம். இது நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

 

சுகாதாரத்துறையுடன் இணைந்துள்ள திறமையான மனிதவளத்தின் தாக்கம், சுகாதார சேவைகளில் காணப்படுகிறது. தொற்றுநோய் பரவலின்போது அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி நடத்திவருகிறது. இன்று இந்தியா 88 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.