Skip to main content

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

Voting for Vice President election begins!

 

இந்தியக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திரௌபதி முர்மு வெற்றி பெற்று நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 25ம் தேதி பதவியேற்றுகொண்டார். 

 

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

 

அதன் காரணமாக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், பாஜக கூட்டணி சார்பில் ஜகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர். இன்று காலை துவங்கியுள்ள இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா அறிவிப்பு! 

Published on 17/07/2022 | Edited on 17/07/2022

 

Margaret Alva announcement on behalf of the opposition parties as the vice presidential candidate!

 

காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பொதுவேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இல்லத்தில் இன்று (17/07/2022) மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது. 

 

இக்கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வி.சி.க. சார்பில் தொல் திருமாவளவன், ம.தி.மு.க. சார்பில் வைகோ, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கலந்துக் கொண்டனர். 

 

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார், "குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்" என்று அறிவித்தார். 

 

கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கோவா, குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். 

 

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Next Story

யார் இந்த ஜெகதீப் தன்கர்?- விரிவான தகவல்! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

Who is Jagadeep Dhankar?- Detailed Information!

 

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 10- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. 

 

இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பதற்கான பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (16/07/2022) மாலை நடைபெற்றது.

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, "பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார். 

 

Who is Jagadeep Dhankar?- Detailed Information!


 

ஜெகதீப் தன்கர் யார்? அவரை குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

கடந்த 1951- ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிதானா பகுதியில் பிறந்தவர் ஜெகதீப் தன்கர். தற்போது இவருக்கு வயது 71. வழக்கறிஞரான இவர், பா.ஜ.க.வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கடந்த 1989- ஆம் ஆண்டு முதன்முறையாக மக்களவைக்கு ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எனினும், 1990 முதல் 1991 வரை மட்டுமே மத்திய இணையமைச்சர் பதவியை வகித்துள்ளார். 

 

பின்னர், 1993- ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை முழுமையாக நிறைவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 2019- ஆம் ஆண்டு மேற்குவங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கரை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். 

 

தற்போது வரை ஆளுநர் பதவியில் நீடிக்கும் ஜெகதீப் தன்கருக்கும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வரும் சூழலில், அவரை பா.ஜ.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக அக்கட்சித் தலைமை தேர்வு செய்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.