உத்தரப்பிரதேச மாநிலத்தின் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுராவில் நடைபெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேசமே இந்தியாவின் விதியை தீர்மானிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா பேசியது பின் வருமாறு: ஒரு காலத்தில் குண்டர்களும், குற்றவாளிகளும் மாநில காவல்துறையினரே பயப்படும் அளவுக்கு பீதியை ஏற்படுத்தினர். பெண்களும், இளம்பெண்களும் வெளியே செல்ல பயந்தனர். ஆனால் அது இப்போது மாறிவிட்டது. குண்டர்களும் குற்றவாளிகளும் இப்போது காவல்துறையைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். அதனால் அவர்கள் தானாகவே முன்வந்து சரண் அடைகிறார்கள்.
குற்றவாளிகளையும், குண்டர்களையும் நாங்கள் கடுமையாக தண்டித்து சிறையில் அடைத்துள்ளோம். நாங்கள் உத்தரப்பிரதேசத்தை குடும்ப ஆட்சி மற்றும் சாத்தியவாதத்திலிருந்து விலக்கி, வளர்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளோம். அதனை உங்களிடமே நீங்கள் காணலாம். 200 மில்லியன் மக்களைக் கொண்ட உத்தரப்பிரதேசம் முன்னேறாத வரை இந்தியாவால் முன்னேற முடியாது. எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் தான் இன்று உத்தரப்பிரதேசம் வளர்கிறது. இந்தியாவின் தலைவிதியை உத்தரப்பிரதேசம் தீர்மானிக்கும். இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.