வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரிக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 19- ஆம் தேதி அன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரும் நவம்பர் 24- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் மக்கள் நலத் திட்டங்கள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்டவைக் குறித்து பிரதமர் ஆலோசிக்கவுள்ளதாகவும், மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான அவசர சட்டத்தைக் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, நவம்பர் 24- ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.