அண்மையில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தனிப்பட்ட சாட்சியமாக இந்த வழக்கில் கோசாவி என்பவரும் அவரது உதவியாளர் பிரபாகர் செயின் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து பிரபாகரன் செயின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானை சிறையிலிருந்து விடுவிக்க நடிகர் ஷாருக்கானிடமிருந்து 25 கோடி ரூபாய் வரை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். அதேபோல், தன்னிடம் பத்துக்கும் மேற்பட்ட வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மஹாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் செய்தியாளர்களைச் சந்திக்கையில், சொகுசு கப்பலிலிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. போலியாக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் வைத்துள்ள லஞ்ச குற்றச்சாட்டு முக்கியமானது என்பதால் இது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்திற்குக் களங்கம் ஏற்படுத்தவே இத்தகைய வழக்கு தொடரப்படுகிறது என்று சொல்லப்படுவது உண்மையாக இருக்குமோ என சந்தேகம் எழுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மஹாராஷ்டிரா மாநில போலீஸ் தானே முன்வந்து விசாரணை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள போதைப் பொருள் தடுப்பு உயரதிகாரிகள் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்துள்ளனர்.