Skip to main content

அமித்ஷா அமைச்சகத்தின் முன்பு 15க்கும் மேற்பட்ட திரிணாமூல் எம்.பிக்கள் தர்ணா!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

tmc mp

 

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், திரிபுரா மாநிலத்திலும் கட்சியை வளர்க்க கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில், அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவிற்கும், திரிணாமூல் காங்கிரஸுக்கும் தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது.

 

இந்தநிலையில் நேற்று (21.11.2021), திரிபுரா முதல்வர் பேசிய பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றபோது, அந்தக் கூட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் சயோனி கோஷ் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி, இருவேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைத் தாண்டி செல்லும்போது ‘கேலா ஹோப்’ என தான் கத்தும் வீடீயோவை சயோனி கோஷ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, திரிபுராவின் அகர்தலாவில் உள்ள காவல் நிலையத்தில், பாஜக உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர்களைத் தாக்கியதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. காவல் நிலையத்தின் முன்னரே காவல்துறையின் முன்பாகவே தங்களது தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.

 

இதற்கிடையே, அகர்தலாவின் பகாபன் தாக்கூர் சௌமுனி பகுதியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவர் சுபால் பௌமிக் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக குண்டர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

 

இந்தச் சூழலில், திரிபுராவில் தங்களது தொண்டர்களைக் காவல்துறையினர் கொடுமை செய்வதாகக் கூறி, இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகாரளிக்க 15க்கும் மேற்பட்ட திரிணாமூல் எம்.பி.க்கள் டெல்லி விரைந்தனர். அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இந்தநிலையில், தற்போதுவரை நேரம் கிடைக்காததையடுத்து அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மற்றும் ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Union Ministry Instructions For Indians traveling to Israel and Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

Union Ministry Instructions For Indians traveling to Israel and Iran

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, ‘இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நிலவும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை, அனைத்து இந்தியர்களும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அந்த நாடுகளில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரங்களை தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும், முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.