மத்திய அரசின் நெல் கொள்முதல் தொடர்பான கொள்கையை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்ட தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், தங்களது மாநிலத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுமா என்பதை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கெடு விதித்துள்ளார்.
நெல் கொள்முதல் தொடர்பான மத்திய அரசு உரிய பதிலைக் கொடுக்காவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் சந்திரசேகரராவ் எச்சரிக்கை செய்துள்ளார்.
டெல்லியில் உள்ள தெலங்கானா பவனில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், விவசாயிகளின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் என்றும், அரசையே கவிழ்க்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கேட்பதற்கு விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது என்று கூறிய அவர், 24 மணி நேரத்திற்குள் நெல் கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என்ற தெலங்கானா மாநிலத்தின் கோரிக்கைக்கு பிரதமரும், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் செவி சாய்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.