Skip to main content

இந்தி தெரியாததால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்...

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

 

fyj

 

மதுரையைச் சேர்ந்த 27 வயதான ஆபிரகாம் சாமுவேல் அமெரிக்காவில் உள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பி.ஹெச்டி படித்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருந்த அவர், மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர், விசா பெறுவதற்காக அங்குள்ள கவுன்ட்டருக்கு சென்ற அவர், குடியுரிமை அதிகாரியிடம் விசா தொடர்பான விவரங்களை ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த அதிகாரி இந்தியில் பதிலளித்துள்ளார். அப்போது, தனக்கு இந்தி தெரியாது எனக் கூறிய சாமுவேல், ஆங்கிலத்தில் பேசுமாறு அதிகாரியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி, இந்தி தெரியாவிட்டால் தமிழகத்துக்கே திரும்பி போ என சாமுவேலிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவருக்கு விசா வழங்கவும் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த உயரதிகாரிகளிடம் சாமுவேல் புகார் தெரிவித்துள்ளார். அவர்களின் நடவடிக்கையின் பேரில் அவருக்கு உடனடியாக விசா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் நேற்று பதிவிட்ட சாமுவேல், 'மும்பை சத்ரபதி விமான நிலையத்தில், இந்தி தெரியாது என்பதால் என்னை குடியுரிமை அதிகாரி ஒருவர் அவமதித்தார். இந்தியில் பேசாததற்காக அவர் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை என்னால் ஏற்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து மும்பை விமான நிலைய உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்' என கூறியுள்ளார். அந்த அதிகாரியின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பை பெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.