Skip to main content

இந்தி தெரியாததால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்...

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

 

fyj

 

மதுரையைச் சேர்ந்த 27 வயதான ஆபிரகாம் சாமுவேல் அமெரிக்காவில் உள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பி.ஹெச்டி படித்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருந்த அவர், மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர், விசா பெறுவதற்காக அங்குள்ள கவுன்ட்டருக்கு சென்ற அவர், குடியுரிமை அதிகாரியிடம் விசா தொடர்பான விவரங்களை ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த அதிகாரி இந்தியில் பதிலளித்துள்ளார். அப்போது, தனக்கு இந்தி தெரியாது எனக் கூறிய சாமுவேல், ஆங்கிலத்தில் பேசுமாறு அதிகாரியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி, இந்தி தெரியாவிட்டால் தமிழகத்துக்கே திரும்பி போ என சாமுவேலிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவருக்கு விசா வழங்கவும் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த உயரதிகாரிகளிடம் சாமுவேல் புகார் தெரிவித்துள்ளார். அவர்களின் நடவடிக்கையின் பேரில் அவருக்கு உடனடியாக விசா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் நேற்று பதிவிட்ட சாமுவேல், 'மும்பை சத்ரபதி விமான நிலையத்தில், இந்தி தெரியாது என்பதால் என்னை குடியுரிமை அதிகாரி ஒருவர் அவமதித்தார். இந்தியில் பேசாததற்காக அவர் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை என்னால் ஏற்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து மும்பை விமான நிலைய உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்' என கூறியுள்ளார். அந்த அதிகாரியின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பை பெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.