இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னரே நீட் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தது. ஆனால், தேர்வு நாளன்று ஜெய்ப்பூரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் அதிரடி சோதனை நடத்திய ராஜஸ்தான் போலீசார், நீட் வினாத்தாளைக் கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்ட நீட் தேர்வு எழுதிய மாணவி, அவரது மாமா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
இதனையடுத்து நீட் தேர்வு தொடர்பாக எழுந்த மோசடி, ஆள்மாறாட்டம், முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளையும், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டையும் முன்வைத்து, நடந்து முடிந்த இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை இரத்து செய்துவிட்டு புதிய தேர்வை நடத்த உத்தரவிடுமாறு இளங்கலை நீட் தேர்வு எழுதிய சில மாணவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில் இன்று (04.10.2021) இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகிய நிகழ்வுகள் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களுக்குப் பாதகமாக இருக்க முடியாது" என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசரணையின்போது "என்ன மாதிரியான ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன? லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு மொத்தமும் ரத்து செய்யப்பட வேண்டுமா?” எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்க இருப்பதாக முதலில் உச்ச நீதிமன்றம் கூறியது. இருப்பினும் பின்னர் வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று அபராதம் விதிக்காமல் மனுவை தள்ளுபடி செய்தது.