
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழ்நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நிதிஷ் குமாரின் அரசாங்கத்தில் வருவாய் துறை அமைச்சராக இருந்த பீகார் மாநில பா.ஜ.க தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனக் சிங், ராஜு சிங், அருணா தேவி, அனில் சர்மா, தேவ்காந்த், நாவல் கிஷோர் யாதவ், விஜய் மண்டல் ஆகியோருக்கு பீகார் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கட்சியின் ஒருவருக்கு ஒரு பதவி கொள்கை என்ற அடிப்படையில், திலீப் ஜெய்ஸ்வால் ராஜினாமா செய்த நிலையில், இந்த அமைச்சரவை விரிவாக்கம் நடந்துள்ளது. பீகார் அரசியலில் பாஜகவின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்காக இந்த விரிவாக்கம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்பு நடந்த இந்த அமைச்சரவை மூலம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.