வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி 12ம் தேதி நகரும் என்பதால் நேற்று அதிகாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து சீரான மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நகரப் பகுதிகளிலும் அரியாங்குப்பம், தவளகுப்பம் ஊசுடு, பாகூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புஸ்ஸி வீதி, லாஸ்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, கருவடிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.