குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நேற்று மனுத்தாக்கலை முடித்துள்ள திரௌபதி முர்மு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவுகளை திரட்டி வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரௌபதி குடியரசு தலைவர் என்றால் யார் பாண்டவர்கள்? மிகவும் முக்கியமாக யார் கவுரவர்கள்?' என பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராம் கோபால் வர்மாவின் இந்த சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து இந்த கருத்து எஸ்.டி,எஸ்.சி பிரிவினரை இழிவுபடுத்துவதாக இருப்பதாக தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கூடூர் நாராயண ரெட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் தான் திரௌபதி முர்முவை அவமதிக்கவில்லை என ராம் கோபால் வர்மா ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.