
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதே சூழ்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வியும் எழுந்திருந்தது. கூட்டணி கட்சிகளுக்குள் ஆலோசனை நடத்தி அடுத்த முதல்வர் யார் என்ற அறிவிப்போம் என்று மகாயுதி கூட்டணி தலைவர்கள் கூறி வந்தனர்.
இதில், முதல்வராக பதவி வகித்து வந்த ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், 132 இடங்களை வைத்திருக்கும் பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டே ஆதரவு இல்லாமல் அஜித் பவாரின் ஆதரவை மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற முனைப்பில் இருந்தது. இந்த சூழ்நிலையில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தருவதாகவும், முதல்வர் போட்டியில் தான் இல்லை எனவும் அஜித் பவார் கூறினார். இருந்த போதிலும், அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து, மகாயுதி கூட்டணி தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் இணைந்து கடந்த 26ஆம் தேதி அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். மேலும், முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் வழங்கினார். இதன் மூலம், தேவேந்திர பட்னாவிஸ் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கில்லை எனவும், முதல்வர் பதவி குறித்து பா.ஜ.கவின் முடிவே இறுதியானது என்றும் அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முன் தினம் (27-11-24) தெரிவித்தார். அதனை தொடர்ந்து, மகாயுதி கூட்டணியில் உள்ள மூன்று தலைவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுவதால் அம்மாநிலத்தில் முதல்வர் பதவியேற்பு தாமதமாகி வருகின்றது. இருப்பினும், புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இல்லை என்று சிவ சேனா கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சிவ சேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிர்சாத் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக வாய்ப்பில்லை. ஏற்கனவே முதலமைச்சராக பதவி வகித்த அவருக்கு இது பொருந்தாது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, மற்றொரு தலைவரை துணை முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கும். ஓரிரு நாட்களில் மகாராஷ்டிர முதல்வர் குறித்து முடிவெடுப்போம். நாங்கள் விவாதித்தோம், விவாதங்கள் தொடரும். நாங்கள் இறுதி முடிவை எடுக்கும்போது உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.