மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கடந்த திங்கட்கிழமை (22.11.2021) டெல்லி சென்றார். அங்கு அவர் முன்னிலையில் பீகார், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று (24.11.2021) பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமியை சந்தித்த மம்தா, அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய மம்தா, "மாநிலம் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். பி.எஸ்.எஃப்-இன் அதிகார வரம்பு நீட்டிப்பு விவகாரம் குறித்தும் பேசினோம். அந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். பிரதமர் மோடியிடம் திரிபுரா கலவரம் குறித்தும் பேசினேன்" என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச தேர்தல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த மம்தா பானர்ஜி, "உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமூலால் உதவ முடியுமென்றால் அங்கு நாங்கள் செல்வோம். அகிலேஷ் எங்கள் உதவியை விரும்பினால், நாங்கள் உதவி செய்வோம். நாங்கள் கோவா மற்றும் ஹரியானாவில் பாஜகவுடன் போரிட தொடங்கிவிட்டோம். ஆனால் சில இடங்களில் பிராந்திய கட்சிகள் பாஜகவுடன் போராடட்டும் என நினைக்கிறேன். நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டுமென அவர்கள் (சமாஜ்வாடி) விரும்பினால் நாங்கள் உதவுவோம்" என கூறினார்.
கடந்த முறை டெல்லி வந்திருந்த மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். ஆனால் அதன்பிறகு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது டெல்லி வந்துள்ள மம்தா, சோனியாவை சந்திக்கவில்லை.
இதையொட்டி சோனியாவை சந்திக்காதது குறித்து மம்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மம்தா, "அவர்கள் பஞ்சாப் தேர்தலில் மும்முரமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏன் சோனியாவை சந்திக்க வேண்டும்? அது அரசியலமைப்பு ரீதியாக கட்டாயமில்லை" என பதிலளித்தார்.
மேலும் மம்தா, நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பை செல்லவுள்ளதாகவும், அப்போது மஹாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.