அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டால், ராமர் கரோனா வைரஸை அழித்துவிடுவார் என பா.ஜ.க. மூத்த தலைவர் ராமேஸ்வர் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவின் தாக்கம் சமீபகாலமாக உச்சத்திலிருந்து வருகின்றது. கடந்த சில நாட்களாகத் தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,720 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,129 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச சபாநாயகரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான ராமேஸ்வர சர்மா குவாலியரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில், "பிரதமர் மோடி ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் போது உலகெங்கிலும், குறிப்பாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள பயங்கரமான வைரஸின் முடிவு ஆரம்பமாகும். ராமர் மனிதக்குலத்தின் நலனுக்காகவும், அரக்கர்களை அழிக்கவும் அப்போது மறுபிறவி எடுத்தார். அதேபோல ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் இந்த வைரஸை அழிப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.