மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கடிதம், ஹரிவன்ஷ் அனுப்பியுள்ளார். அதில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் தன்னை அவமதித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹரிவன்ஷ், நாளை காலை வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தர்ணா செய்து வரும் எம்.பி.க்களுக்கு இன்று காலை டீ எடுத்து கொண்டு சென்றார் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ். அதன்பிறகு, தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பிக்களுக்கு டீ கொடுத்தார். ஆனால் டீ யை வாங்க எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், "மாநிலங்களவை எம்.பி.க்கள் 8 பேர் மீதான சஸ்பெண்டை திரும்பப் பெறாவிடில் மாநிலங்களவை தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும். குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக பயிர்களை தனியார் கொள்முதல் செய்வதைத் தடுக்க மசோதா தேவை." என்றார்.