
கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இருப்பினும், இந்த திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இங்கு புதிய கல்விக் கொள்கையை திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.
இந்த சூழ்நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி, வரும் 2026ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஆண்டு இரண்டு முறை நடத்துவது தொடர்பான வரைவு விதிமுறைகளை நேற்று முன் தினம் (25-02-25) சிபிஎஸ்சி வெளியிட்டது. அதில், பிராந்தியப் மொழிப் பாடங்கள் பட்டியலில் பஞ்சாபி மொழி இடம் பெறவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு பஞ்சாப் மாநில அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் கூறியதாவது, “பஞ்சாப் மொழியை நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும் நாங்கள் எதிர்க்கிறோம். அத்தகைய நடவடிக்கைகளை எனது அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பஞ்சாபில் உள்ள மாணவர்கள் பஞ்சாபியை ஒரு முக்கிய பாடமாகப் படித்திருக்காவிட்டால், அவர்கள் எந்தப் பள்ளியிலிருந்தும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாகக் கருதப்பட மாட்டார்கள். மாநிலத்தில் உள்ள எந்தவொரு பள்ளியுடனும் இணைக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளும் பஞ்சாபியை முதன்மைப் பாடமாகக் கற்பிக்க வேண்டும். இந்த உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் பள்ளிகள் பஞ்சாப் பஞ்சாபி மற்றும் பிற மொழிகள் கற்றல் சட்டம், 2008 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
பஞ்சாப் சட்டமன்றம் கடந்த, 2021 ஆம் ஆண்டு பஞ்சாபி மற்றும் பிற மொழிகள் கல்வி (திருத்தம்) மசோதாவை நிறைவேற்றியது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பஞ்சாபி கட்டாயப் பாடமாக மாற்றப்பட்டது. அரசு அலுவலகங்களிலும் பஞ்சாபி மொழி கட்டாயமாக்கப்பட்டது. முன்னதாக, தெலுங்கானா மாநிலத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாக தெலுங்கானா அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. .