இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து, அவர்களின் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கும் வியூக வகுப்பாளராக அறியப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இதற்காக, ஐ-பேக் என்கிற தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.
பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பஞ்சாப் முதல்வரான, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங், பிரசாந்த் கிஷோரை முதன்மை ஆலோசகராக நியமித்துள்ளார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் காங்கிரஸ் வேட்பாளர்களை, பிரசாந்த் கிஷோர் தேர்வு செய்வதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் இந்த தகவலை பஞ்சாப் முதல்வர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "பிரசாந்த் கிஷோருக்கு வேட்பாளர் தேர்வில் சொல்வதற்கு எதுவுமில்லை. எனது முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோரின் பணி வரையறைக்குட்பட்டது. அவரது பணி, ஆலோசனை வழங்குவது மட்டுமே. முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை" என முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்ததாக பஞ்சாப் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.