புதுச்சேரி வானரப்பேட்டையின் பிரபல ரவுடிகள் பாம் ரவி மற்றும் அந்தோணி. இவர்கள் இருவரும் இன்று (24/10/2021) பிற்பகல் அலைன் வீதியில் இருசக்கர வாகனத்தில் நின்றப்படி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுற்றி வளைத்து நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் நிலைகுலைந்த ரவுடிகள் சுதாரிப்பதற்குள் மர்ம நபர்கள் கத்தி மற்றும் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். அப்போது அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே, அனைவரும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த முதலியார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பாம் ரவி மற்றும் அந்தோணியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இருவரும் இறந்துவிட்டனர் என மருத்துவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் காட்டுத்தீ போல் புதுச்சேரி முழுவதும் பரவியதையடுத்து, வானரப்பேடையைச் சேர்ந்த 500- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் மேலும் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. புதுச்சேரி மாநில கிழக்கு பிரிவு எஸ்.பி தீபிகா தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகள் மூலமும், மோப்பநாய் உதவியுடனும் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் பழைய ரவுடிகளான பாம் ரவி மற்றும் அந்தோணி, தற்பொழுது ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ முயற்சி செய்து வருகின்றனர். இருந்தாலும், பழைய முன்விரோதம் மற்றும் தொழில் போட்டி காரணமாக, இந்த கொலை நடந்துள்ளது. மேலும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாம் ரவி முயற்சி செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பாம் ரவியும், அந்தோணியும் படுகொலை செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பா.ம.க. மாவட்டச் செயலாளர் தேவமணி நேற்று முன்தினம் (22/11/2021) இரவுதான் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் சமீப காலமாக கொலை, கொள்ளைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தற்போது பட்டப்பகலில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு மத்தியில் ரவுடிகள் வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும், படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.