புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஏப்ரல் 06- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே, புதுச்சேரியில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால், மதுபானக் கடத்தலை தடுக்கும் வகையில் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து புதுச்சேரி காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (04/03/2021) அதிகாலை கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில், காவல்துறையினர் எல்லைப் பகுதியான முள்ளோடை- பரிக்கல்பட்டு சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு செவர்லெட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 500ml, 150ml, 180ml, 90ml என்ற அளவுகளில் சாராய பாக்கெட் மற்றும் பாட்டில்கள் உரிய அனுமதியின்றி கடத்திச் செல்வது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 75 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட உச்சிமேடு பகுதியைச் சார்ந்த சின்னத்துரை என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 80,000 மதிப்பிலான சாராயத்தை கலால்துறையிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.