புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாண்லே நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் மக்களால் அதிகம் விரும்பி வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காப்பி ரூபாய் 12 என இருந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி பதவியேற்ற சில மாதங்களில் ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டது. மேலும் நிறுவனத்தில் தேனீரும் அறிமுகம் செய்யப்பட்டது.
இதனால் விற்பனையும், வாடிக்கையாளர்களும் அதிகரித்த நிலையில், பொருட்களின் விலையை நிர்வாகம் திடீரென உயர்த்தியுள்ளது. அதாவது வாசனை பால் ரூபாய் 25- லிருந்து 30 ஆகவும், குல்பி 30 ரூபாயிலிருந்து 35 ஆகவும், மோர் 7 ரூபாயிலிருந்து 10 ஆகவும், தயிர் ரூபாய் 2 முதல் 5 வரையும், வெண்ணெய், பாதாம் பவுடர், பால் கோவா, பன்னீர் ஆகியவை கிலோவிற்கு ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் லெஸ்சி மற்றும் ஐஸ்கிரீமின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (20/05/2022) முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விற்பனையாளர்களிடம் விசாரித்தபோது, "கடந்த சில தினங்களாக பால் பொருட்கள் சப்ளை குறைவாக உள்ளது. இது குறித்து நிர்வாகத்திடம் தெரிவித்துக் கூடுதலாக வழங்கக் கோரி வந்தோம். ஆனால் நிர்வாகம் விலையை உயர்த்தி மக்களைப் பொருட்களை வாங்காமல் மாற்று பொருட்களுக்கு செல்ல வழிவகுத்து எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாலின் விலையும் உயர்த்தப்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது" என்று கூறினர்.