புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவர் தரப்பிலும் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் என சமமாக உள்ளது.
நேற்று (16.02.2021) செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் என்னென்ன ஷரத்துகள் கூறப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில் செயல்படுவோம். எதிர்க்கட்சிகள் எங்களைப் பதவி விலகச் சொல்வார்கள், ஆனால் எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்ட அந்த விதிமுறைப்படி செயல்படுவோம்'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் துணைநிலை ஆளுநர் அலுவகத்தில் ‘புதுச்சேரி முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்’ எனக் கடிதம் வழங்கினர். ஆளுநரின் செயலாளரிடம் இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரி வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.