ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவோடு, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், முதல்முறையாக தேர்தல் அரசியலில் கால் பதித்த பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார். பிரியங்கா காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்யன் மோக்கேரி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிட்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி, வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்தே அந்த தொகுதியில் சூராவளி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (23-11-24) நடைபெற்று வருகிறது. இதில், வயநாடு தொகுதியில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி காலை முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, வயநாடு வேட்பாளரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, சுமார் 6,22,338 வாக்குகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்தியனை விட 4,10,931 வாக்குகள் அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளார். சத்யன் 2,11,407 வாக்குகளைப் பெற்று 2வது இடத்தில் உள்ளார். பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடத்தில் உள்ளார்.
வயநாடு மக்களவை தொகுதியில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் ராகுல்காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது, இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலேயே 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். இதன் மூலம், தனது முதல் தேர்தலிலேயே , தனது சகோதரனை முந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில், ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்ற பட்சத்தில், அவர் ஏற்கெனவே பதவி வகித்த வயநாடு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அதனால், வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.