இந்திய நாட்டின் 73- வது குடியரசுத்தினம் நாளை (26/01/2022) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள், காவல்துறையினர், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பொது இடங்களில் கண்காணிப்பு பணிகளையும், சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.
டெல்லியில் நாளை (26/01/2022) காலை 08.00 மணிக்கு நடைபெறும் விழாவில், ராஜபாதையில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இந்த விழாவில், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். அதேபோல், முப்படைகளின் உயரதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் சாதனைகள், பாராமரியத்தை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகளும் அணி வகுப்பில் இடம் பெறுகிறது. அதேபோல், நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் ஏவுகணைகள், பீரங்கிகள், டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களும் அணி வகுப்பில் இடம் பெறுகின்றன.
இந்த நிலையில், குடியரசுத்தினத்தையொட்டி, இன்று (25/01/2022) இரவு 07.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.