இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. இந்திய தலைநகர் டெல்லி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது. இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கு ஒன்றை இன்று (06.05.2021) விசாரித்த உச்ச நீதிமன்றம், கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க தயாராகுமாறு மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம், "நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் மூன்றாவது அலை விரைவில் வர இருக்கிறது. மேலும், அது குழந்தைகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றால், அவர்களின் பெற்றோர்களும் செல்ல வேண்டியிருக்கும். எனவே அந்த வயதை சார்ந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். நாம் இதுகுறித்து அறிவியல் ரீதியாக திட்டமிட்டு, ஏற்பாடுகளை செய்ய 0வேண்டும்" என மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
"நாம் இப்போது தயாரானால்தான், நம்மால் மூன்றாவது அலையை சமாளிக்க முடியும்" என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் கூடுதல் ஆக்சிஜன் இருப்பை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகிப்பதற்கான மத்திய அரசின் ஃபார்முலாவை அது மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஆக்சிஜன் விநியோக விவகாரத்தை இந்திய அளவில் பார்க்க வேண்டும் என மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவிட்டு, மேற்படிப்புக்காக காத்திருக்கும் மருத்துவர்களின் சேவையை எப்படி பெறுவது என்பது குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம், "இன்று நம்மிடம் ஒன்றரை லட்சம் மருத்துவர்கள், மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் மருத்துவர்களும், இரண்டரை லட்சம் செவிலியர்களும் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் சேவை மூன்றாவது அலையின்போது முக்கியமானதாக இருக்கும்" என கூறியுள்ளது.
இந்தியாவில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதென மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.