ஜம்மு காஷ்மீரில், இம்மாத தொடக்கத்தில் இருந்தே தீவிரவாதிகள் குடிமக்களை குறித்து வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தீவிரவாதிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட ஏழு பெயரை சுட்டுக்கொன்ற நிலையில், கடந்த சனிக்கிழமை பீகாரைச் சேர்ந்த தெருவோர வியாபாரியையும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தச்சர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று, இரண்டு பீகார் தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இம்மாத தொடக்கத்தில் இருந்து தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்குப் பொறுப்பேற்றுள்ள லஷ்கர்-இ-தொய்பா சார்பு இயக்கமான ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பயங்கரவாத குழு, ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறுமாறு புலம்பெயர் தொழிலாளர்களை எச்சரித்துள்ளது.
இந்தச்சூழலில் புலம்பெயர் தொழிலாளர்களும் தங்கள் உயிருக்குப் பயந்து ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் மக்களைக் குறி வைத்து நடத்தப்படும் தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, பிரிவினைவாதிகளுடன் தொடர்புடைய 900-த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்புப் படைகள் தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதில் பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதிகள் சிலரும், பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர்.