இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்கள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து கேட்டறிகின்றன. இதன் பிறகு மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.