இந்தியாவில் நூறு கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நேற்று (21.10.2021) சாதனை நிகழ்த்தப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், வரவிருக்கும் பண்டிகைகளை எச்சரிக்கையோடு கொண்டாட வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது,
“நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட நமது தடுப்பூசி நம் மக்களைப் பாதுகாத்துள்ளது. இனிவரும் காலங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும். கரோனா என்னும் பெரும் துயரத்தைச் சந்தித்த நாம், எந்த துயரத்தையும் சந்திக்கும் வலிமையைப் பெற்றுள்ளோம்.
தொற்றுநோய்க்கு எதிரான நமது முதல் பாதுகாப்பு, பொதுமக்கள் பங்கேற்பாகும். அதன் ஒரு பகுதியாக மக்கள், விளக்குகளை ஏற்றினர். தட்டுகளை தட்டி ஒலி எழுப்பினர். நோயை விரட்ட இது நமக்கு இது உதவுமா என சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இது மருத்துவத்துறைக்கு உற்சாகத்தை தந்தது.
வரவிருக்கும் பண்டிகைகளை மிகவும் எச்சரிக்கையுடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்னும் செலுத்திக்கொள்ளாத அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மிகுந்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியேறும்போது காலணி அணிவதுபோல் முகக்கவசத்தை அணிவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.