ஐ.நா.வின் 75வது ஆண்டு விழா மற்றும் பொதுசபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.
சர்வதேச நாடுகளிடையேயான அமைதியை நிலைநாட்டவும், அரசியல் ரீதியிலான பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வுகளைக் கனவும் அமைக்கப்பட்ட ஐநா சபையின் 75வது ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கான பொதுச்சபை கூட்டம் நேற்று தொடங்கியது.
காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "75 ஆண்டுகளுக்கு முன்பு போரின் கொடுமைகளிலிருந்து விடுபட்டு உலகில் அமைதி நிலவ புதிய நம்பிக்கையாக ஐ.நா. சபை தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இன்றைய சவால்களைக் காலாவதியான கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு நாம் போராட முடியாது. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல், ஐ.நா. நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ள இன்றைய உலகத்திற்கு, இன்றைய யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் குரல் கொடுக்கும், சமகால சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் மனித நலனில் கவனம் செலுத்தும் ஒரு சீர்திருத்த பன்முகத்தன்மை நமக்குத் தேவை" எனத் தெரிவித்தார்.