Skip to main content

"மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப சில முயற்சிகள் நடக்கின்றன" - பிரதமர் குற்றச்சாட்டு 

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

Narendra Modi

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜக உயர்மட்டக்குழுவின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி கட்சிக்கு நிர்வாகிகளுக்கு உரையாற்றினார்.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இந்த மாதத்துடன் பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறோம். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சமூகநீதி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. இழந்த நம்பிக்கையை 2014இல் நாட்டு மக்களிடையே பாஜக மீண்டும் விதைத்தது. நாட்டு மக்கள் இப்போது பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப சில முயற்சிகள் நடப்பதைப் பார்க்கிறோம்.

 

பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பார்க்கிறது. அவற்றை வணங்குகிறது. தேசிய கல்விக்கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். குடும்ப அரசியலால் வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்