இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (21.10.2021) இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி, நேற்று மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர், "257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் இந்த சாதனை சாத்தியமானது. மக்களுக்கு வாழ்த்துகள். 100 கோடி தடுப்பூசி என்பது புதிய சாதனையின் தொடக்கம். உலகளவில் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டபோது, இந்தியா குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தடுப்பூசிகளை எப்படி பெறுவார்கள், எப்படி செலுத்துவார்கள் என கேள்வியெழுப்பப்பட்டது. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் 100 கோடி தடுப்பூசி சாதனை பதிலளித்துள்ளது" என தெரிவித்தார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி, இந்திய கரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், சைடஸ் காடிலா, பயாலஜிக்கல் இ, ஜென்னோவா பயோஃபார்மா மற்றும் பனேசியா பயோடெக் ஆகிய ஏழு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்கவுள்ளன.
இந்த ஆலோசனையில், தடுப்பூசி தயாரிப்பை மேலும் அதிகப்படுத்துவது, தகுதியான நபர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.