இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (25.10.2021) உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 மருத்துவ கல்லூரிகளைத் தொடங்கிவைத்தார். இந்த விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது,
முதல்வராக இல்லாதபோதும், உத்தரப்பிரதேசத்தின் மோசமான மருத்துவ கட்டமைப்பு குறித்து யோகி பாராளுமன்றத்தில் எடுத்துரைத்ததை உத்தரப்பிரதேச மக்களால் மறக்க முடியாது. ஒரே நேரத்தில் 9 கல்லூரிகளின் திறப்பு விழா இதற்கு முன் நடந்ததுண்டா? முந்தைய அரசுகள் தங்கள் குடும்பத்தின் லாக்கர்களை நிரப்பி தங்களுக்கென்று மட்டுமே சம்பாதித்துக்கொண்டிருந்தன. ஆனால் ஏழைகளின் பணத்தை சேமித்து அவர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.
கரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், 100 கோடி தடுப்பூசி மருந்துகளை செலுத்தி, நாடு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலமாக, சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தவர்கள், சுகாதார அமைப்பின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, அதனை வசதி இல்லாமல் வைத்திருந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் வேகம், மருத்துவ படிப்பிற்கான இடங்களிலும், மருத்துவர்களின் எண்ணிக்கையிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இருப்பதால், இப்போது ஏழை பெற்றோரின் குழந்தைகளும் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என கனவு காணவும், அதை நிறைவேற்றவும் முடியும். அடுத்த 10 - 12 ஆண்டுகளில், நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான மருத்துவர்களைப் நாடு பெறப் போகிறது.” என்றார்.