
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்து வந்தநிலையில், நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 46,164 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சில தினங்களுக்கு பிறகு, தினசரி கரோனா பாதிப்பு ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. இந்தநிலையில் ராகுல் காந்தி, அதிகரிக்கும் கரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை (அரசு சொத்துக்களை குத்தகைக்கு விடும் திட்டம்) விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிகரிக்கும் கரோனா பாதிப்புகள் கவலையை அளிக்கிறது. அடுத்த அலையில் தீவிர விளைவுகளை தவிர்க்க தடுப்பூசி செலுத்துதல் வேகம் பெறவேண்டும். தயவு செய்து உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்திய அரசு, விற்பனையில் மும்மரமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.