நேபாள நாட்டு அரசின் பொதுத்துறை நிறுவனம் தாரா ஏர்லைன்ஸ். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று (29/05/2022) காலை 09.55 மணிக்கு பொக்காராவில் இருந்து புறப்பட்டு, ஜோம்சோமுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் மற்றும் மூன்று ஜப்பானியர்கள், விமான பணியாளர்கள் என மொத்தம் 22 பேர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளது. இதையடுத்து, மாயமான விமானத்தைத் தேடும் பணியை நேபாள நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் நேபாள நாட்டு அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமான விமானம் கடைசியாக, தவுலகிரி மலைப்பகுதியில் காணப்பட்டதாகவும், அங்கு தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.