இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காகக் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், 12 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிநீக்கத்தைத் திரும்பப் பெறவேண்டும் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இந்தநிலையில் 12 உறுப்பினர்களின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெறக்கோரி நேற்று நாடாளுமன்றத்தின் காந்தி சிலை முன்னர் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 12 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி நீக்கத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதினார்.
Opposition leaders including Mr @RahulGandhi protest at Gandhi statue in Parliament House on the issue of suspension of 12 MPs in #RajyaSabha pic.twitter.com/qYbO24h5ip— Supriya Bhardwaj (@Supriya23bh) December 1, 2021
இந்தநிலையில் தற்போது ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, 12 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி நீக்கத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பதவிநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களாவது உறுப்பினர்களும் இன்று காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.