ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நிலையில், அங்கு சட்டமன்றத் தேர்தலை நடத்த மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச்சூழலில் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் ஆதரவாளர்கள் 20 பேர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைவரை மாற்றக்கோரி பதவி விலகினர். இந்தச்சூழலில் சமீபகாலமாக குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த பொதுக்கூட்டங்களில் பேசுகையில் அவர், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குத் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதைப் பதிவு செய்து வருகிறார். அதேபோல் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் அடுத்த தேர்தலில் 300 இடங்களை வெல்லும் எனக் கருதவில்லை எனத் தெரிவித்தார்.
இந்தச்சூழலில் குலாம் நபி ஆசாத், காங்கிரஸில் இருந்து விலகி, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தனிக்கட்சி தொடங்குவார் என அகில இந்திய காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள குலாம் நபி ஆசாத், கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "நான் சொந்த கட்சி ஆரம்பிக்கவில்லை. தனது இறப்பு எப்போது என்பது ஒருவருக்கு தெரியாதது போல, அரசியலில் அடுத்த என்ன நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது. யாராலும் அடுத்து என்ன நடக்கும் என கணிக்க முடியாது. ஆனால் எனக்கு கட்சி ஆரம்பிக்கும் நோக்கம் இல்லை" எனக் கூறியுள்ளார்.