வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.
அதன்படி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம், போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இந்தச்சூழலில் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், உயிரிழந்த விவசாயிகள் பற்றிய தரவுகள் குறித்தும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "வேளாண் அமைச்சகத்திடம் இந்த விவகாரத்தில் (விவசாயிகள் இறப்பு) எந்த பதிவும் இல்லை. எனவே (இழப்பீடு வழங்குவது குறித்து) கேள்வி எழவில்லை" எனக் கூறியுள்ளார்.
இந்தநிலையில் மத்திய அரசின் பதிலை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அரசின் பதில் விவசாயிகளை அவமதிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; இது விவசாயிகளை அவமதிப்பதாகும். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு தங்களிடம் எந்த பதிவும் இல்லை என எப்படிக் கூற முடியும்?
700 பேர் பற்றிய பதிவு அரசாங்கத்திடம் இல்லை என்றால், தொற்றுநோய் பரவலின்போது லட்சக்கணக்கான மக்களின் தரவுகளை எவ்வாறு சேகரித்தார்கள்? கடந்த 2 ஆண்டுகளில் கரோனா காரணமாக 50 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், ஆனால் அரசாங்கத்தின் கூற்றுப்படி, 4 லட்சம் பேர் மட்டுமே. வைரஸ் காரணமாக இறந்துள்ளனர். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.