2018ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் பயன்பாட்டைத் தடை செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது. அதன்தொடர்ச்சியாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில் இந்தியர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்தநிலையில், மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் கிரிப்டோகரன்சி தீவிரமான கவலையாக உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதுமட்டுமின்றி பிட்காயின்கள் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிக்கள், தீவிரவாத செயல்களுக்குப் பயன்படலாம் என அச்சமும் நிலவிவருகிறது.
இந்தநிலையில் மத்திய அரசு, கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இந்த மசோதா, பிட்காயின் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யும் வகையிலும், அரசே அதிகாரபூர்வ கிரிப்டோகரன்சியை வெளியிட வழிவகை செய்யும் வகையிலும் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், பிட்காயின் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை மத்திய அரசு சேகரிப்பதில்லை எனவும், இந்தியாவில் பிட்காயினை ஒரு நாணயமாக அங்கீகரிக்க எந்த முன்மொழிவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.